8-வது நாளாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால், குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் இன்றுடன் எட்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை நீடிக்கிறது. இதேபோன்று, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளிலும் நீர்வரத்து சீராகாத நிலையில், கடந்த ஐந்து நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
வார விடுமுறை தினங்களைக் கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் குற்றாலத்திற்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள், அருவிகளில் குளிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் இந்தத் தடையை நீட்டித்துள்ளதாகவும், மழை குறைந்து நீர்வரத்து சீரடைந்த பின்னரே அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.