குற்றால அருவிகளில் 3வது நாளாக குளிக்கத் தடை - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால், குற்றால அருவிகளில் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையானது தற்போது தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் (ஜூன் 24) காலை முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால் தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தன. அருவிகளில் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீரானது அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதனால் 3வது நாளாக இன்றும் (ஜூன் 26) குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவிகளில் தண்ணீர் வரத்து சீராகும் பட்சத்தில் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.