தொடர்மழை எதிரொலி: கும்பக்கரை அருவியில் 20-வது நாளாக குளிக்க தடை!
தொடர்மழை காரணமாக கும்பக்கரை அருவியில் 20-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கும்பக் கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவி இயற்கை எழில் சூழ மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருவியில் மூலிகை கலந்த தண்ணீர் வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து குளித்துவிட்டு செல்வார்கள்.
இதையும் படியுங்கள்: அடுத்தடுத்து 4 படங்களை தயாரிக்கும் அட்லீ..!
கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை, வட்டக்கானல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வந்தது. தொடர் கனமழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடை விதித்தனர்.
இந்நிலையில் கும்பக்கரை அருவியல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீரின் அளவு
குறையாமல் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக குளிக்க விதிக்கப்பட்ட தடை 20-வது நாளாக தொடர்கிறது.