குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட #Nimesulide மருந்து... கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; மருந்து கட்டுப்பாட்டு துறை எச்சரிக்கை!
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘நிம்சுலைடு’ எனும் வலி நிவாரணி மருந்து விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பபாட்டு துறை எச்சரித்துள்ளது.
நிம்சுலைட் எனும் வலி நிவாரணி மருந்து கால் வலி, மூட்டு வலி, காது-மூக்கு - தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் இம்மருந்து பல எதிர்விளைவுகளை உண்டாக்குவதாக உள்ளது. இதனால் அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இந்த மருந்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தடை செய்தது.
ஆனால் இந்தியாவில் சில கட்டுப்பாடுகளுடன் பயன்பாட்டில் இருந்தது. அதாவது கடந்த 13 வருடங்களுக்கு முன்பே 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்து கொடுக்கக்கூடாது எனும் கட்டுப்பாட்டுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்கும் ஐ.பி.சி. சமீபத்தில் நடத்திய ஆய்வில், நிம்சுலைடு மருந்து தற்போதும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருவது தெரியவந்தது.
இதனையடுத்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘நிம்சுலைடு’ எனும் வலி நிவாரணி மருந்து விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பபாட்டு துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாநில மருந்து கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கல் துறை அதிகாரி எம்என் ஸ்ரீதர் கூறியதாவது;
குழந்தைகள், சிறார்களுக்கு, 'நிமெசலைட்' மருந்து வழங்கக் கூடாது. இப்போது வரை அதுகுறித்த புகார் எதுவும் வரவில்லை. ஒருவேளை 12 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு 'நிமெசலைட்' மருந்து பரிந்துரைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மருத்துவர் பரிந்துரையின்றி மருந்தகங்களில் எந்த மருந்து, மாத்திரையும் வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்குவது கண்டறியப்பட்டால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்” என தெரிவித்தார்.