மணிப்பூரில் செயல்பட்டு வந்த 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை!
இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என மணிப்பூரில் செயல்படும் மைதேயி போராளி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து மைதேயி - குகி இன மக்களுக்கு இடையேயான மோதல் நீடித்து வருகிறது. ஆறு மாதங்களுக்கு மேலாகியும் வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை. இந்த வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என்பதாலும், நாட்டின் குடிமக்கள், காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யும் செயல்களில் ஈடுபடுவதாலும் மணிப்பூரின் குறிப்பிட்ட இயக்கங்கள் தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி மணிப்பூரை சேர்ந்த 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் விடுதலை ராணுவம் மற்றும் அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, மணிப்பூர் மக்கள் ராணுவம் ஆகிய அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது.