திவாலான மாலத்தீவு அரசு.. சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை!
இந்திய அரசை விமர்சித்ததை தொடர்ந்து, மாலத்தீவு புறக்கணிக்கப்பட்ட நிலையில் மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் திவாலானதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன் வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், பலரும் மாலத்தீவுக்கு எதிரான பிரச்சாரங்களைச் சமூக வலைதளங்களில் முன்வைத்தனர். மாலத்தீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவைக் குறிப்பிட்டனர். இதனால், பலர் தங்களின் மாலத்தீவு பயணத்தையும் ரத்து செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சீனாவின் அதிபரை சந்தித்தார். பின்னர் நாடு திரும்பிய அதிபர், முதல்கட்டமாக மார்ச் 10-ம் தேதிக்குள் ஒரு விமான தளத்திலும், மே 10-ம் தேதிக்குள் மீதமுள்ள 2 விமான தளங்களிலும் பணிபுரிகின்ற இந்திய ராணுவ வீரா்கள் வெளியேறுவார்கள் என தெரிவித்தார்.
இதனிடையே, இந்திய சுற்றுலா பயணிகள் வருகை மாலத்தீவில் கடுமையாக சரிந்துள்ளது. மாலத்தீவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் முதலிடத்தில் ரஷ்யாவும், 2-வது இடத்தில் இத்தாலியும், 3-வது இடத்தில் சீனாவும், 4-வது இடத்தில் பிரிட்டனும், 5-வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
இந்நிலையில் மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் திவாலானதாக அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் பிரதமர் மோடியுடனான உறவுகள் சீர்குலைந்ததையடுத்து, மாலத்தீவு பெரும் நெருக்கடியில் உள்ளது. இன்று மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் தங்களது நாடு திவாலாகிவிட்டதாக அறிவித்து, பிணை எடுப்பு (Bailout) கோரியுள்ளது.