வாழ வழியில்லாமல் நிற்போரிடம் வட்டி கேட்டு மிரட்டும் வங்கி - கொந்தளித்த #Wayanad மக்கள்!
வாழ வழியில்லாதவர்களிடம் வட்டி கேட்டு மிரட்டும் வங்கியால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
ராணுவப் படையினரும் தங்களின் தேடுதல் பணியை கடந்த 9-ம் தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். அதே நேரத்தில் மாயமான 100- க்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் மற்ற பிரிவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 9-ம் தேதி முதல் தேடுதல் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 126 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. 1000த்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மீட்புப் பணிகளில் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, ஸ்வீடன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 6 விஞ்ஞானிகள் உட்பட 24 விஞ்ஞானிகளைக் கொண்ட உலக வானிலை மாற்றங்களை ஆய்வு செய்யும் குழு வயநாடு நிலச்சரிவு குறித்து ஆய்வு நடத்தியது.
வயநாடு நிலச்சரிவால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. அடிப்படை வசதிகளின்றி முகாம்களில் பலர் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள கிராமின் வங்கியில் கடன் பெற்றவர்களை EMI தொகையை கட்டச் சொல்லி அந்த வங்கியினர் தொடர்ச்சியாக தொல்லையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சிலரது வங்கிக் கணக்கில் இருந்து இஎம்ஐ தொகையை எடுத்துக் கொண்டதாக வங்கியின் தரப்பிலிருந்து எஸ்எம்எஸ் வந்ததால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வங்கியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்பட்டா பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கேரள கிராமினா வங்கியை முற்றைகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் உக்கிரமாக நடைபெற்றதால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.