#Bangladesh கலவரம் - ஸ்ரீ தாக்கேஸ்வரி கோயிலை பாதுகாத்த முஸ்லிம்கள், இந்துக்கள்!
வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் டாக்காவில் உள்ள ஸ்ரீ தாகேஸ்வரி கோயிலை இந்துக்கள், முஸ்லிம்கள் உள்பட அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து பாதுகாத்த சம்பவம் நடந்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் அரசுப் பணியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டைக் கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, வங்கதேச பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார். ஆட்சிக் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அவாமி லீக் கட்சியினரின் சொத்துகள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.
அந்நாட்டில் சிறுபான்மையினரான இந்துகளை குறிவைத்து வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. இந்நிலையில், பழைய டாக்கா பகுதியில் உள்ள பல நூற்றாண்டுகள் பழைமையான ஸ்ரீ தாகேஸ்வரி கோயிலை இந்துக்கள்-முஸ்லிம்கள் ஒன்றிணைந்து பாதுகாத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், இக்கோயிலுக்கு கடந்த 13-ஆம் தேதி வருகை தந்து, இந்து சமூகத்தினருடன் கலந்துரையாடினார்.
ஸ்ரீ தாகேஸ்வரி கோயில் பூஜாரி ஆஷிம் மைத்ரோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
"இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் என அனைத்து மதத்தினரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்வார்கள். இங்குள்ள அம்மன் அவர்களுக்கு தாய் போன்றவர். அவர்கள் ஆறுதல், செழிப்பு மற்றும் மன அமைதியை வேண்டி வழிபடுகின்றனர். போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியபோது, நான் கோயிலுக்குள்தான் இருந்தேன். கோயில் நிா்வாக உறுப்பினர்களும் உடனிருந்தனர். எங்களைப் பற்றி அச்சப்படாமல் கோயில் பாதுகாப்பைப் பற்றி மட்டுமே கவலையடைந்தோம்.
இதையும் படியுங்கள் : குறைந்து வரும் Y குரோமோசோம்... ஆண் இனத்துக்கு அழிவா? ஆய்வில் பரபரப்பான தகவல்!
காவல்துறை பணியில் இல்லாத அந்த நேரத்தில் வன்முறையாளர்கள் கோயிலுக்குள் நுழையாதவாறு அனைத்து வாயில்களையும் இழுத்து மூடினோம். கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு இப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள்,இந்துகள் மற்றும் பலர் வெளியே காவலுக்கு நின்றனர். அதனால், அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. கோயிலில் பூஜைகள் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்தன. டாக்கா தவிர வங்கதேசத்தின் பிற பகுதிகளில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் எங்கள் கோயிலுக்கு பக்தர்கள் வருகிறார்கள்.
இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில் பாதுகாப்பு பணியில் போலீசார் மீண்டும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது இங்கு சூழல் இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது. நாங்கள் வங்கதேசத்திலேயே தொடர்ந்து இருப்போம். போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடியவர்கள். அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது முக்கியமில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் நல்ல முறையில் ஆட்சி செய்தால், அது அனைவருக்கும், அனைத்து சமூக மக்களுக்கும் நல்லது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.