வங்கதேச எம்பி அன்வருல் அசீம் அனார் கொலை: நடந்தது என்ன?
மேற்கு வங்க மாநிலத்துக்கு சிகிச்சைக்கு வந்த வங்கதேச நாட்டின் எம்பி அன்வருல் அசீம் கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
வங்கதேச எம்பியான அன்வருல் அசீம், கொல்கத்தாவில் உள்ள நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி முதல் அவரை காணவில்லை. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து இருநாட்டு போலீசாரும் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு குடியிருப்பில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
கொல்கத்தாவின் நியூ டவுண் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இக்கொலை நடந்துள்ளது. அன்வருல் உடல் இன்னும் கைப்பற்றப்படாத நிலையில், மேற்கு வங்க சிஐடி போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் இந்த வழக்கில் வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து சிஐடி உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அமெரிக்க குடிமகனான வங்கதேச எம்.பி அன்வருலின் நெருங்கிய நண்பர் தான், எம்.பி.யை கொலை செய்ய கொலையாளிகளுக்கு ரூ.5 கோடி கொடுத்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் கொலைச் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது" என்றார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட குடியிருப்பிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடன் அன்வருல் வந்ததும், கடந்த மே 15 முதல் 17 வரையிலான நாள்களில் எம்.பி.யைத் தவிர மற்றவா்கள் அடுத்தடுத்து குடியிருப்பில் இருந்து வெளியேறியதும் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
வங்கதேச எம்.பி. அன்வருல் உடல் பாகங்கள் மிக மோசமாக சிதைக்கப்பட்டு, அது கிடைத்தாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கொலையாளிகள் பல்வேறு பகுதிகளிலும் வீசிச்சென்றிருக்கலாம் என்று டாக்கா மாநகரக் காவல்துறை கூடுதல் ஆணையர் ஹருண் தெரிவித்துள்ளார்.
அதாவது, கொலையாளிகள், உடலை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைத்திருக்கலாம் என்றும், சில உடல் பாகங்களை அவர்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், அதற்கான சில ஆதாரங்கள் கிடத்திருப்பதால், அது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.