வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க தயார்” - மம்தா பானர்ஜி!
வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக மேற்கு வங்கத்தின் வாயில்கள் எப்போதும் திறந்தே இருக்கும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் .
வங்கதேசத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடைபெறும் போராட்டம், தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மேலும் இந்த கலவரத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வங்கதேசம் முழுவதும் இணையம் உள்ளிட்ட தொலைத்தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து வங்கதேசத்தில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் பயின்று வரும் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பலரும் தங்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
அதன்படி இதுவரை 1000 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ள நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர், "அண்டை நாடான வங்கதேசத்தில் நடக்கும் விவகாரங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.
இதுகுறித்து மத்திய அரசு தான் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடுகள் எடுக்க முடியும். ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்வேன். துயரத்தில் உள்ள ஆதரவற்ற மக்கள் எங்கள் கதவுகளைத் தட்டினால், நாங்கள் நிச்சயம் அவர்களுக்கு அடைக்கலம் தருவோம். ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் நான் இதை உறுதியாக கூறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே வங்கதேசத்தில் அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி வளாகம் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வங்கதேசத்தில் அரசு மற்றும் பல்வேறு ஊடகங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு பாதிக்கப் பட்டுள்ளது.