வங்கதேச நெருக்கடி | இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!
வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் எதிரொலியாக, இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில், வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இட ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக கூறி கடந்த மாதம் அந்நாட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்.
தொடர் போராட்டத்தையடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில், வங்கதேசத்தில் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா டெல்லி அருகே உள்ள ஹிண்டண் விமானப்படை தளத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்தடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் வங்கதேச நிலவரம், ஹசீனா இந்தியா வந்துள்ளது குறித்து ஆலோசனை நடந்ததாக கூறிப்படுகிறது.
மேலும், வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், தலைநகர் டாக்காவுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தியுள்ளது. இந்தியா- வங்கதேசம் இடையேயான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.