இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் | போட்டி நடைபெறும் இடங்கள் மாற்றம்!
வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான போட்டி நடைபெறும் இடங்களில் பிசிசிஐ மாற்றம் மேற்கொண்டுள்ளது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி கர்நாடக மாநிலம் தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்தது. அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தர்மசாலாவில் மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் போட்டி குவாலியருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான போட்டி நடைபெறும் மைதானங்களிலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது சென்னை சேப்பாக்கத்தில் இரண்டாவது டி20 (ஜனவரி 25) போட்டி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டி20 போட்டி நடைபெறுவதாக இருந்த கொல்கத்தா மைதானத்தில் முதல் டி20 போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டி நடைபெறும் இடங்களில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர, போட்டிகள் நடைபெறும் தேதிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளவிருப்பதால், ஜனவரி 25 ஆம் தேதி கொல்கத்தாவில் போட்டியை நடத்துவது கடினம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.