பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!
பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் தலைநகரும், இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக கருதப்படும் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அங்கு ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இதற்காக நீர் நிலைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளும் முளைத்து வருகிறது.
பெங்களூருவில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்னரே அங்கு குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு சுமார் 30% ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டதாக கூறப்படுகிறது. மேலும் நகரை சுற்றியுள்ள பல ஏரிகள் வறண்டு கிடக்கிறது.
இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கும் ஆனந்த் மஹிந்திரா, ஏர் கண்டிஷ்னர்களில் இருந்து வடியும் தண்ணீரை சேமிப்பது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பலரது கவனத்தை பெற்றுள்ளது.
This needs to become standard equipment throughout India wherever people use A/Cs
Water is Wealth.
It needs to be stored safely…
👏🏽👏🏽👏🏽
Spread the word. pic.twitter.com/vSK0bWy5jm
— anand mahindra (@anandmahindra) March 16, 2024
ஏசி யூனிட்களில் இருந்து தினமும் தண்ணீரை சேகரிக்கும் எளிய பயனுள்ள முறை அந்த வீடியோவில் உள்ளது. ஏசி யூனிட்டின் கன்டென்சுடு வடிகாலில் ஒரு குழாய் இணைக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் தண்ணீர் சேகரிப்புத் தொட்டியில் சேர்கிறது. இந்தியா முழுவதும் மக்கள் எங்கெல்லாம் ஏ/சி பயன்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் வடியும் நீரை இவ்வாறு பத்திரமாக சேமித்து வைக்க வேண்டும் என ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.