பெங்களூரு குண்டுவெடிப்பு | சிசிடிவியில் சிக்கிய சந்தேக நபர்...
பெங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஓட்டலில் மர்ம நபர் ஒருவர் பையை எடுத்துச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் மிகவும் பிரபலமான உணவமாக 'ராமேஸ்வரம் கபே' கடை திகழ்கிறது. திவ்யா ராகவேந்திர ராவ்-ராகவேந்திர ராவ் தம்பதி இந்த கடைகளை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கபே மூலம் மாதம் ரூ.4½ கோடி வருமானம் வருவதாக கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர அப்துல்கலாமின் நினைவாக அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரம் பெயரை கொண்டு 'ராமேஸ்வரம் கபே' என்ற பெயரில் திவ்யா-ராகவேந்தர் தம்பதி உணவகங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பெங்களூர் குந்தலஹள்ளியில் உள்ள புரூக்பீல்டிலும் ராமேசுவரம் கபே ஓட்டல் இயங்கி வருகிறது. அந்த ஓட்டலில் நேற்று மதியம் 1 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். சரியாக மதியம் 1 மணி 5 நிமிடத்தில் ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது.
இதனால் ஓட்டல் மொத்தமும் புகை மண்டலமாக மாறியது. ஓட்டலில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தரையில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களும் உடைந்து சேதமாகின. ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள், குண்டுகள் வெடித்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்த உணவுப்பொருட்களை அப்படியே போட்டுவிட்டு, பதறி அடித்து வெளியே ஓடிவிட்டார்கள். சிலிண்டர் வெடித்ததாக பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வெடித்து குண்டு என்பது அதன்பின்னரே அவர்களுக்கு தெரிந்தது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த பெண் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.
ஓட்டலுக்கு சாப்பிட வருவது போல வந்த வாடிக்கையாளர் ஒருவர், தான் கையோடு கொண்டு வந்த பையை ஓட்டலில் வைத்து விட்டு சென்றதாகவும், அவர் விட்டு சென்ற பை ஒன்றில் இருந்த பொருள்தான் வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவியில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.
வெடித்தது மிக வீரியமிக்க IED வெடிகுண்டு என போலீசார் கூறுகின்றனர். தீவிர விசாரணை நடந்து வருகின்றது என்று துணை முதல்வர் டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். பையில் இருந்ததைத் தவிர, வளாகத்தில் ஐஇடி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 28 முதல் 30 வயதுடையவர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை கைது செய்தது போலீஸ். வாடிக்கையாளர்போல் வந்து வெடிகுண்டு வைத்தது யார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கைதானவர் யார் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் வெளியாகவில்லை.
சந்தேக நபர், முகமூடி, கண்ணாடி மற்றும் தலைக்கு மேல் தொப்பியால் முகத்தை மறைத்து, இட்லி தட்டை எடுத்துச் செல்வது ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் சிக்கியுள்ளது.