திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் பந்தக்கால் முகூர்த்தம்!
புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பிரம்மோற்சவ விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கொடி மரத்து விநாயகர் மற்றும் பந்தக்கால்களுக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கொண்டு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் பந்தக்கால்கள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கோயிலுக்கு சொந்தமான கிராமங்களை சேர்ந்தவர்கள் பூஜிக்கப்பட்ட இரு பந்தக்கால்களை ஏந்தி ஆலய பிரகாரத்தை வலம் வந்து பைரவர் சன்னிதி அருகிலும் யாகசாலை அருகிலும் பந்தக்கால்கள் ஊன்றப்பட்டது. பிரம்மோற்சவ விழா வரும் மே 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ மத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தியாகராஜர் உன்மத்த நடன நிகழ்ச்சி ஜுன் 04ம் தேதியும், திருத்தேரோட்டம் ஜூன் 06ம் தேதியும், 07ம் தேதி ஸ்ரீ சனிபகவான் தங்க காக்கை வாகன வீதியுலாவும், 08ம் தேதி தெப்போற்சவமும் 09ம் தேதி வைகாசி விசாகத்தன்று தீர்த்தவாரி நடைபெற உள்ளது.