For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வாழை” திரைப்படத்தின் பின்னணி என்ன? மாரி செல்வராஜ் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

08:59 AM Jul 19, 2024 IST | Web Editor
“வாழை” திரைப்படத்தின் பின்னணி என்ன  மாரி செல்வராஜ் வெளியிட்ட பரபரப்பு தகவல்
Advertisement

என்னுடைய கஷ்டங்களை வைத்து எடுத்துள்ள படம் “வாழை” என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.  

Advertisement

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படத்தின் முதல் சிங்கிள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “முதன்முதலில் நான் படம் இயக்கலாம் என நினைத்த படம் ‘வாழை’. ரூ.50 லட்சம் இருந்தால் படம் எடுத்துவிடலாம் என்ற நிலையில், சின்ன பட்ஜெட் படம். என்னை பாதித்த கதை இது. இந்தப் படத்தை பொறுமையாக நேரம் கிடைக்கும்போது எடுக்க வேண்டும் என்று தள்ளிவைத்தேன்.

‘பரியேறும் பெருமாள்’ எடுத்தேன். அடுத்து ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ இயக்கிக் கொண்டிருந்தபோது, ’வாழை’ என் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அப்படித்தான் இப்படம் தொடங்கியது. அடுத்து பா.ரஞ்சித் தயாரிப்பில் அடுத்து ஒரு படம் இயக்குகிறேன். தாணுவுடன் ஒரு படம் உள்ளது. என்னை அரவணைத்து இவர்கள் என்னை புரிந்துகொண்டு அழைத்துச் செல்கின்றனர். அவர்களுக்கு நன்றி. நான் உருவாக்கும் எல்லா கதாபாத்திரங்களும் என் வாழ்க்கையில் நான் பார்த்தது. அவர்கள் இன்னும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே எனக்குள் பதட்டம் இருந்துகொண்டேயிருக்கிறது.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பாதகத்தி’ பாடல் என்னை தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது. நான் பட்ட கஷ்டங்களை நீங்கள்பட வேண்டும் என்று கூறி நடிகர்களிடம் வேலை வாங்கினேன். கலையரசன் 100 கிலோ வெயிட்டை தலையில் சுமந்திருந்தார். திவ்யா துரைசாமி 60 கிலோ எடையை தூக்கினார். கடுமையான உழைத்தனர். பார்க்கவே பாவமாக இருக்கும். நிறைய வேலை வாங்கியிருக்கிறேன்.

மொத்த படக்குழுவுக்கும் நன்றி. என் வாழ்வில் நடந்த ஆகப்பெரும் துயரத்தை மனைவி திவ்யா தயாரிப்பார் என நான் நினைத்துப் பார்த்து கிடையாது. பிரமிப்பாக இருக்கிறது. என் வாழ்க்கையில் மீளமுடியாத துயரம் ‘வாழை’. என்னுடைய கஷ்டங்களை வைத்து எடுத்துள்ள படம் வாழை.என்னைப்பற்றி நிறைய கேள்விகள் உங்களிடம் இருக்கும். என்னை நீங்கள் புரிந்துகொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் இது” என்றார்.

Tags :
Advertisement