#Australia | 16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை - அமலுக்கு வரும் புதிய சட்டம்!
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை அந்நாட்டு அரசு இயற்ற முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் எங்கள் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் இன்னும் 12 மாதங்களுக்கும் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். மேலும் இதில் பெற்றோர்கள் அனுமதி பெற்றாலும் விலக்கு அளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் அணுகலைத் தடுக்க, தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதைக் காட்டுவது சமூக ஊடகத் தளங்களின் பொறுப்பாகும். அது பெற்றோர், இளையோரின் கடமை அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தளங்களில், ‘மெட்டா’வின் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், டிக்டாக், எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ ஆகியவை அடங்கும் என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மிஷெல் ரோலண்ட் தெரிவித்துள்ளார். ‘அல்ஃபபெட்’ நிறுவனத்தின் யூடியூப் தளமும் சட்டத்தின் வரம்பிற்குள் வரும் என தெரிவித்துள்ளார்.