கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை வெளியிடத் தடை – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு!
தக் லைஃப் படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கமல்ஹாசன் தமிழ் மொழியில் இருந்து கன்னடம் மொழி தோன்றியது என்ற கருத்தை தெரிவித்தார். இது குறித்து கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, கன்னட மொழியின் நீண்ட வரலாறு கமலுக்கு தெரியாது என்று பதில் கொடுத்தார். மேலும் சில அமைப்புகள் கமல்ஹாசன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கமல்சாஹன் மன்னிப்பு கோரவில்லை என்றால், தக் லைஃப் படத்தின் வெளியீட்டை தடை செய்வோம் என மிரட்டல் விடுத்தனர்.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன், சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றும் நான் அன்பினால் தான் அப்படி சொன்னேன் என்றும் கூறினார். அத்துடன் அரசியல்வாதிகளுக்கு மொழியைப் பற்றி பேச தகுதியில்லை, நான் உள்பட இத்தகைய மிக ஆழமான விவாதங்கள் அனைத்தையும் வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி நிபுணர்களிடம் விட்டுவிடுவோம் என்று விளக்கம் கொடுத்தார்.
இதையடுத்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் கமலுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். அதன் பின்னர் இந்த விவகாரம் குறித்து பேசிய கமல் மன்னிப்பு கோர முடியாது என்று தெரிவித்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, அவரின் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதித்துள்ளது. தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.