கமல்ஹாசனின் “குணா” திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் கமல்ஹாசனின் “குணா” திரைப்படத்தை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்வதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘குணா’. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 ஆண்டுகள் கடந்த பின்னரும் படத்தையும், அதன் பாடல்களையும் இன்றைய தலைமுறையினர் கொண்டாடிவருகின்றனர்.
அதற்கு உதாரணம் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலும், ‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல’ வசனமும் ரசிகர்களை ஈர்த்தது. படம் வெளியாகி இப்பாடலும், அதன் காட்சிகளும் மீண்டும் ‘குணா’ வைப்பை இன்றைய தலைமுறையிடத்தில் ஏற்படுத்தியது.
‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் உற்சாக வெற்றியைத் தொடர்ந்து, டிஜிட்டல் முறையில் மெருகூட்டப்பட்டு ‘குணா’ திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிரமிட் ஆடியோ குரூப் நிறுவனம் ‘குணா’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கமலின் குணா படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குணா படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி மனு அளித்திருந்தார்.
மேலும், படத்தின் முழு உரிமை தாரராக தன்னை அறிவிக்க வேண்டும் எனவும் கன்ஷியாம் ஹேம்தேவ் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவுக்கு ஜூலை 22-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.