பாகிஸ்தான் ரயில் கடத்தலுக்கு பலூச் அமைப்பு பொறுப்பேற்பு - 20 ராணுவ வீரர்கள் கொலை!
தென்மேற்கு பாகிஸ்தானில் 400க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணயக்கைதிகளை கொன்றுவிடுவோம் என மிரட்டலும் விடுத்துள்ளது.
பணயக்கைதிகளை மீட்க ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் “கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” எனவும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து, கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு ஒன்பது பெட்டிகளில் சுமார் 450 பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தபோது, கிளர்ச்சியாளர்கள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் ரயில் ஓட்டுநர் காயமடைந்ததையடுத்து ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 450 பயணிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் பொதுமக்களை விடுவித்து ராணுவ வீரர்கள் உட்பட 182 பேரை சிறைபிடித்தனர். இதில் 20 ராணுவ வீரர்களை கொன்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ராணுவம் வான்வழித் தாக்குதலை நிறுத்தாவிட்டால் அனைத்து பணயக்கைதிகளையும் தூக்கிலிடுவோம் என பலூச் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு இதற்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் கூடுதல் ராணுவ படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்த கொடுஞ்செயலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அரசு இதுவரை தெரிவிக்க்காமல் உள்ளது.