பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த #Flood - பக்தர்களுக்கு தடை!
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்த நிலையில், சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நேற்று முதல் ஆகஸ்ட் .18ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், நேற்றும், இன்றும் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு வாட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இந்த சூழலில் பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் இன்று காலை வழக்கம் போல பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த கோயில் ஆற்றின் மையப்பகுதியில்அமைந்துள்ள நிலையில், நேற்று பெய்த மழையின் காரணமாக ஆஞ்சநேயர் கோயிலின் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோயிலில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.