சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவும் பாலா - குவியும் பாராட்டு!
சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நடிகர் KPY பாலா உதவி செய்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. அதனால், குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியதால், மக்கள் கடும் பாதிப்பில் உள்ளனர். இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாலா தற்போது, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன் மொத்தக் கையிருப்பையும் உதவிக்காக தந்துள்ளார்.
இதையும் படியுங்கள் ; போலி சுங்கச்சாவடி நடத்தி ரூ.75 கோடிக்கு மேல் வசூல் – எங்கே தெரியுமா?
சென்னை வெள்ளத்தில் பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு மொத்தமாக 2,00,000 உதவித் தொகை வழங்கினார்.
பின்னர் தான் அவசர தேவைக்காக சீட்டு போட்டு வைத்திருந்த 3 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு, பள்ளிக்கரனையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம் 600 கிலோ அரிசி வாங்கி அளித்துள்ளார். அதனை தொடர்ந்து, துரைப்பாக்கம் மற்றும் பல்லவன் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகளை வெள்ள நிவாரணமாக அளித்துள்ளார்.
மேலும், நரிக்குறவர் சமுதாய மக்கள், சாலையோரம் வசிக்கும் மக்கள் என 140 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் உதவித்தொகையுடன் உடைகளையும் வெள்ள நிவாரண பொருட்களாக வழங்கியுள்ளார்.
பாலாவின் முன்மாதிரியான இந்த செயல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.