பாலா 25 & வணங்கான் இசை வெளியீடு - கோலாகலமாக நடந்த இருபெரும் விழா!
இயக்குநர் பாலாவின் 25 ஆண்டுகால சினிமா பயணத்திற்கான பாராட்டு விழாவும், தற்போது அவர் இயக்கியுள்ள வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 1999-ல் வெளியான ‘சேது’ படம் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்து, இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர்.வி. உதயகுமார், கே. எஸ். அதியமான், வினோத் (கொட்டுக்காளி), பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம், V.Z. துரை, சிங்கம் புலி, சரண், அரவிந்த் ராஜ், எழில், கோபிநாத் (ஜீவி), பி.எஸ் வினோத் ராஜ், பாரி இளவழகன், ஜி.ஆர். ஆதித்யா, நாகேந்திரன், சுரேஷ், அஜயன் பாலா, கேபிள் சங்கர், அறிவழகன் (ஈரம்), சுசீந்திரன், மீரா கதிரவன், மூர்த்தி, நித்திலன், நம்பிராஜன், நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜி. வி பிரகாஷ், கருணாஸ், தம்பி ராமையா, மன்சூர் அலிகான், வெற்றி, பிரஜின், பிரதீப், சிவாஜி, அரீஷ் குமார், ஆர்.கே சுரேஷ், கூல் சுரேஷ், சூப்பர் குட் சுப்பிரமணி, வீரா, அப்புக்குட்டி, ஏ.எல். உதயா, ஆர். கே.கிரண் ( ஆர்ட் டைரக்டர்), தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஏ.எல். அழகப்பன், தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, P L தேனப்பன், சித்ரா லஷ்மண், வெற்றிக்குமரன், நடிகைகள் கருத்தம்மா ராஜஸ்ரீ, சாயா தேவி, வரலஷ்மி, காயத்ரி ரகுராம், அபிதா, வேதிகா, ரித்தா, வசுந்தரா, மதுமிதா, பிரிகிடா, ஜுலி, ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா,
“சேது படம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படத்தின் தாக்கம் பல நாட்களாக இருந்தது. இந்த நிலையில்தான் 2000ம் ஆண்டில் நெய்க்காரன்பட்டியில் ஒரு படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் எனக்கு ஒரு போன் கால் வந்தது. அப்போது பேசிய இயக்குநர் பாலா, எனது அடுத்த படத்தில் உன்னை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறேன் என்று சொன்னார். அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றியது. அவரது தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்காது.
நந்தா படத்தை பார்த்து விட்டு தான் கவுதம் மேனன், ‛காக்க காக்க' படத்தில் நடிக்க அழைத்தார். அதன் பிறகுதான் என்னுடைய சஞ்சய் ராமசாமி இங்குதான் இருக்கிறார் என்று என்னை அழைத்தார் ஏ.ஆர். முருகதாஸ். இதற்கெல்லாம் காரணம் இயக்குநர் பாலா அண்ணன்தான். பாலா அண்ணன் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு நிரந்தரமான உறவு. இந்த வாழ்க்கையை கொடுத்ததுக்கு என்னுடைய அன்பும், மரியாதையும் எப்போதும் அவர் மீது இருக்கும்.

என்னுடைய வாழ்க்கையில் சிகரெட் பிடித்ததில்லை. நந்தா படத்திற்காகதான் சிகரெட் பிடித்து பழக வைத்தார். இயக்குனர் பாலாவை சார் என்று அழைத்தால் அவருக்கு பிடிக்காது. அண்ணன் என்று அழைத்தால் தான் பிடிக்கும். அவரை எப்போதும் நான் அண்ணன் என்று தான் அழைப்பேன். அதோடு நானும் அவரும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் எங்கள் இருவருக்கும் இடையிலான அன்பு மட்டும் ஒரு நாளும் குறையாது” என்று பேசினார் சூர்யா.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது,
“சேது படம் வரும்போது எனக்கு 14 வயது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு ரொம்பவே பாதிப்பை கொடுத்தது. அவரது படங்களை எல்லாம் திரையரங்கில் பார்த்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அமரன் படம் இந்த தீபாவளிக்கு வெளியானபோது படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்மறை முடிவாக இருக்கிறதே என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் பாலா அண்ணனின் பிதாமகன் படம் இதேபோல தீபாவளிக்கு எதிர்மறை முடிவுடன் வந்து ஹிட் அடித்தது என்றும் சொன்னார்கள். அதேபோல தான் நடந்தது.

அவருடைய அவன் இவன் பட விழாவை நான்தான் தொகுத்து வழங்கினேன். இன்றும் அது என் மனதில் நினைவிருக்கிறது. அருண் விஜய் அண்ணன் தான் இந்த விழாவிற்கு நீ கட்டாயம் வர வேண்டும் என கூப்பிட்டார். எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்வதுதான் அவருடைய உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு தம்பியாக அவரது இந்த படத்தின் வெற்றிக்கு நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
இயக்குனர் மிஷ்கின் பேசும்போது,
“ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சரியாக போகாத நிலையில், அப்படியே சோர்வுடன் அண்ணன் பாலா ஆபீஸ் இருந்த தெரு வழியாக வந்து கொண்டிருந்தேன். அப்போது என்னை பார்த்து பாலா உள்ளே அழைத்து ஆறுதல் படுத்தினார். கண்ணீரும் விட்டார். அடுத்து உடனே என்னிடம் நான் தயாரிக்கும் படத்தை நீ இயக்குகிறாயா என்று ஒரே வார்த்தைதான் கேட்டார். அப்படி அவர் எனக்கு மறுவாழ்வு கொடுத்த படம் தான் பிசாசு. தோல்வியால் என் மீது எனக்கே நம்பிக்கை குறைந்திருந்த நிலையில் என்னை உற்சாகப்படுத்தி மேலே அழைத்து வந்தவர் அண்ணன் பாலா தான். இந்த விழாவுக்கு நான் மதியமே வந்துவிட்டேன். ஏனென்றால் இது என்னுடைய வீட்டு விழா போல” என்று கூறினார்.