தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை - அரசு தலைமை காஜி அறிவிப்பு!
இன்று பரவலாக பிறை தென்பட்டதால் தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும்
கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின்
முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம்.
இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் ஈகை திரு நாளான பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாஹுத்தின் முகமது அய்யூப் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. , “இன்று துல் ஹஜ் பிறை புதுச்சேரியில் காணப்பட்டது. அதன் காரணமாக நாளை துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் பக்ரீத் வரும் ஜூன் 17ம் தேதி கொண்டாடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.