“பாஜவிற்கும், தமாகாவிற்கும் தான் வாக்கு வங்கி அதிகம்” - ஜி.கே.வாசன்!
தமிழ்நாட்டில் எங்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் வாக்கு வங்கி அதிகம் இருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குழு
தொடர்பான தேர்தல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமாகா தலைவர் ஜிகே வாசன் பங்கேற்றார். ஆலோசனை கூட்டம் நிறைவுற்ற பின்னர், ஜிகே வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொகுதி பங்கீடு குழுவின்
கூட்டமானது இங்கே நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கடந்த நாட்களில விநியோகிக்கப்பட்ட வேட்பாளர் விண்ணப்பங்கள் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதைத் தொகுதிவாரியாக பிடித்து வேட்பாளரின் சாதகம் பாதகம் தொகுதியின் வெற்றி
வாய்ப்பு எப்படி இருக்கிறது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு, தொகுதியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது
என்று பாரதிய ஜனதா கட்சியுடன் கலந்து ஆலோசித்து தொகுதிகள் குறித்து
முடிவெடுக்கப்படும். கடந்த நான்கு நாட்களில் 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. 35 நாடாளுமன்ற தொகுதிக்கு விண்ணப்பங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் எந்த தொகுதியில் நாம் போட்டியிடுகிறோம் என்பது குறித்து கூட்டணியின் தலைமையான பாஜகவிடம் பேசி முடிவு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் எங்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது. எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பது குறித்து கூட்டணி தலைமையே முடிவு செய்யும். எல்லா மண்டலத்திலும் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகளில் என் பெயரில் கூட ஐந்து விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.
சாதி, மொழி, இனம், மதம் இவை அப்பாற்பட்டு வேட்பாளரின் வெற்றி, தொகுதியின் பலம் இவை பொறுத்து வேட்பாளர் தேர்வு இருக்கும். சரத்குமாரின் இயக்கம் மரியாதைக்குரிய இயக்கம் அவரின் வரவு நல்வரவு. வெற்றி கூட்டணி. கூட்டணி தொடர்பாக பாஜகவிடம் நாங்கள் எந்த விதமான நிபந்தனையும் விதிக்கவில்லை. தமிழ்நாட்டின் பெரிய கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கருதுகிறது. டாக்டர் ராமதாஸ் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி மட்டுமல்லாமல், இந்தியாவின் மூத்த தலைவராகவும் அவர் இருக்கிறார். அவருக்கான முக்கியத்துவம் இருக்கும்.
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. நாளுக்கு நாள் எங்களுக்கு ஆதரவு
பெருகி கொண்டிருக்கிறது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடியின் வெற்றியை நாம் கொண்டாட வேண்டும்”
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி கூறினார்.