டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்!
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். இதையடுத்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பரப்புரைக்காக ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கியது. மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படியும் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த ஜாமினை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார். இந்த ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இதனை அடுத்து இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில், ஜூன் 2-ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறைக்கு சென்றார்.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் வழக்கு டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று (20.06.2024) விடுமுறைக்கால நீதிபதி நியாய் பிந்து தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, மதுபான கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, ரூ.1 லட்சத்துக்கான ஜாமின் பத்திரம் அளித்துவிட்டு நாளை (20.06.2024) திகார் சிறையிலிருந்து கேஜரிவால் விடுதலையாகிறார்.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்குயதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.