ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக் கொன்ற காவலருக்கு ஜாமீன் மறுப்பு!
மகாராஷ்டிரத்தில் ஜெய்ப்பூர்- மும்பை ரயிலில் பயணித்த 4 பேரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலருக்கு ஜாமீன் வழங்க மும்பை நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் சேதன்சின்ஹ் சௌதாரி எனும் காவலர் ஓடும் ரயிலில் தனது மூத்த அதிகாரி மற்றும் அதில் பயணித்த மூன்று பயணிகளை சுட்டுக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டார். இதற்காக கடந்த மாதம் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாவும், மாயைகள் நிறைந்த உலகில் துன்புறுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவரது ஜாமீனை எதிர்த்து ரயில்வே போலீசார் கூறியதாவது ;
அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது கொண்டுள்ள கோவமும் வெறுப்பும் மட்டுமே இந்தக் குற்றச் செயலைத் தூண்டியுள்ளது. இவருக்கு ஜாமீன் வழங்குவது சட்டத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குறிப்பிட்ட சமுதாயத்தினரின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும். மேலும், சவுதாரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அது சட்டத்தைப் பற்றி எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கி, சில மதக் குழுக்களிடையே அச்சம், பீதி மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என ரயில்வே காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ரயில்வே காவலர் சேதன்சின்ஹ் சௌதாரிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.