கையில் ரத்த ஓட்டம் பாதிப்போடு பிறந்த குழந்தை : 5 மணி நேரம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் அசத்தல்!
வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தைக்கு அடுத்த சில மணி நேரங்களில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருள் ரத்தன். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி காலை 9.55
மணி அளவில் பொன் ராணி என்பவருக்கு சுக பிரசவத்தின் மூலம் 3.5 கிலோ எடையுள்ள குறைமாத பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை பரிசோதித்ததில் வலது கையில் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரவித்தனர். இதையடுத்து, குழந்தை பிறந்த அன்றே பிற்பகல் 3.30 மணி அளவில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை சேர்க்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : INDIA கூட்டணியின் பொதுக்கூட்டம் – மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் கூறியதாவது:
"குழந்தையின் வலது கையில் மேல் மூட்டுக்கு மேலே உள்ள பகுதி நீல நிறமாக மாறியதோடு, அதன் இயக்கமும் குறைந்தது. வலது கையில் புயநாடி, ரேடியல், அல்நார் துடிப்பு உணரப்படவில்லை. வலது கை சப்கிளாவியன் மற்றும் அச்சுநாளங்கள் சாதாரண ஓட்டத்தைக் காட்டினாலும், கையில் புயநாடி, ரேடியல், அல்நார் நாளங்களில் ஓட்டம் இல்லை. இதையடுத்து, மாலை 4.30 மணியளவில் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தை மருத்துவம், குழந்தை அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மயக்க மருந்து, நரம்பியல் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை பெறப்பட்டது.
வாஸ்குலர் அறுவை சிகிச்சை துறை தலைவர் ராஜேஷ், உதவிப் பேராசிரியர் நவநீதகிருஷ்ண பாண்டியன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் செந்தில் சிவமுத்து, உதவிப் பேராசிரியர் பெலிக்ஸ் கார்டெல்லா, குழந்தை அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் கண்ணன், மயக்க மருந்து துறை தலைவர் அமுதா ராணி, பேராசிரியர் செல்வராஜ், உதவிப் பேராசிரியர் செண்பகராஜன் ஆகியோர் தலைமையில் சுமார் 5 மணி நேரம் அவசர அறுவை சிகிச்சை நடைபெற்றது. அச்சு தமனியிலிருந்து ரத்த உறைவு அகற்றப்பட்டது"
இவ்வாறு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சுகாதாரத் துறை வரலாற்றில் முதல் முறையாக பிறந்த ஒரு நாள் குழந்தைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாஸ்குலர் அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.