பாபரின் இரண்டரை வருட ஆதிக்கத்தை உடைத்த கில்..! - பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டின், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சுப்மன் கில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில லீக் போட்டிகளே உள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் அரையிறுதிக்கு தயாராகி வருகின்றன. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் உள்ளது.
வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் சுப்மன் கில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 830 புள்ளிகள் பெற்றுள்ள சுப்மன் கில், சுமார் 950 நாட்களாக முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோருக்குப் பின்னர், ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டின், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய 4-வது இந்தியர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் விராட் கோலி 4-வது இடத்திலும், ரோகித் சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படியுங்கள் : “காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க கூடாது” – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு!
அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் முகமது சிராஜ் முதல் இடம் பிடித்துள்ளார். இதே பட்டியலில் குல்தீப் யாதவ் 4-வது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 8-வது இடத்திலும், முகமது சமி 10-வது இடத்திலும் உள்ளனர். உலகக்கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா, ஐசிசி தரவரிசைப் பட்டியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.