பாபர் மசூதி இந்திய முஸ்லிம்களிடம் இருந்து திட்டமிட்டு பறிப்பு- ஒவைசி காட்டம்!
இரவு நேரத்தில் சிலைகள் வைக்கப்பட்டு, பாபர் மசூதி இந்திய முஸ்லிம்களிடம் இருந்து திட்டமிட்ட முறையில் பறிக்கப்பட்டதாக, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் நாளை மறுநாள் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந் நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஒருபுறம் மக்கள் ராமர் பக்தியில் மூழ்கியிருக்கிறார்கள். மறுபுறம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி அசாதுதீன் ஒவைசி, ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார். கர்நாடக மாநிலம் கலபுர்கியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
“பாபர் மசூதி இந்திய முஸ்லிம்களிடம் இருந்து திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது. அந்த மசூதியில் 500 ஆண்டுகளாக இந்திய இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்தனர். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸை சேர்ந்த ஜிபி பந்த் முதலமைச்சராக இருந்தபோது, இரவு நேரத்தில் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டன. பின்னர் இவை அகற்றப்படவில்லை.
அப்போது நாயர் அயோத்தியின் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவர் ஒரு படி மேலே சென்று, பாபர் மசூதியை மூடிவிட்டு அங்கே வழிபடத் தொடங்கினார். விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) உருவாக்கப்பட்ட போது ராமர் கோயிலே அயோத்தியில் இல்லை. தேசத்தந்தை காந்தி ராமர் கோயிலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பாபர் மசூதி இந்திய முஸ்லிம்களிடம் இருந்து திட்டமிட்ட முறையில் பறிக்கப்பட்டது.