For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது” - பதஞ்சலி விளம்பர வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

12:43 PM Apr 02, 2024 IST | Web Editor
“பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது”   பதஞ்சலி விளம்பர வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
Advertisement

தடை உத்தரவை மீறி பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவம் தவறான விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரத்தில் பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

தடை உத்தரவை மீறி பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவம் தவறான விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஹிமா கோலி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.  விசாரணைக்கு பாபா ராம்தேவ் நீதிமன்றத்தில் ஆஜர் நேரில் ஆஜரானார்.  விசாரணையில், பதஞ்சலி நிறுவன தரப்பு,  நிறுவனத்தின் மீடியா பிரிவுதான் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளனர். அதற்காக மன்னிப்பு கோரியுள்ளோம் என தெரிவித்தது.

இதற்கு,  அப்படியானால் மீடியா பிரிவு நிறுவனத்தின் கீழ் இல்லாமல் தனியாக இயங்குகிறதா என்ன? இந்த விவகாரத்தில்,  வழக்கு விசாரணையில் உள்ள போது எவ்வாறு பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடத்த முடியும்? எதன் அடிப்படையில் உங்கள் நிறுவன மருந்துகள் மற்ற மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்? அதற்கான அறிவியல்ரீதியிலான நிரூபணம் உள்ளதா? தொடர்புடைய அமைச்சகத்தில் நீங்கள் ஏதேனும் அனுமதி பெற்றீர்களா?  என சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் உங்கள் மன்னிப்பை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

நீதிபதிகளின் கருத்தை தொடர்ந்து,  நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக பாபா ராம்தேவ் தெரிவித்தார். இதற்கு,  "மன்னிப்பை ஏன் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை? நீங்கள் செய்திருப்பது மிக தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு.  எங்களுக்கு உங்கள் மன்னிப்பு தேவையில்லை என்று ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளோம்.  இந்த விவகாரத்தில் நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு.  மன்னிப்பு கோர வேண்டும் என நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நினைத்திருந்தால்,  நீதிபதிகள் வந்து அமர்ந்த உடன் அவர்கள் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும்.

மன்னிப்பு என்ற வார்த்தை அவர்கள் வாயில் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை.  நீதிமன்றத்தில் அவர்கள் பேசுவதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளோம் . நீங்கள் பத்திரிக்கையில் பேசுவதை யாரும் தடுக்க முடியாது.  ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறும் வகையில் நீங்கள் கருத்துகளை கூறியது சட்ட விரோதம்.  யாருக்கும் பாடம் புகட்டுவதற்காக நாங்கள் இங்கு உட்காரவில்லை.  சாதாரண மனிதர்களோடு இவர்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டு ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது” என தெரிவித்தனர்.

மேலும் பதஞ்சலி நிறுவனத்தின் விதி மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்க ஆயுஷ் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கை வரும் ஏப்.10 ஆம் தேதி தள்ளி வைத்தனர்.  அடுத்த விசாரணையிலும் பாபா ராம்தேவ்,  ஆச்சாரியா பாலகிருஷ்ணா ஆகியோர் மீண்டும் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement