Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பாஜக ஆளும் மாநிலங்களில் ED-யும், IT-யும் அலுவலகத்தை விட்டு வெளியே வருவதில்லை!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

10:00 PM Nov 05, 2023 IST | Web Editor
Advertisement

வருமானவரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்களுக்குத் தெரிகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அவரவர் அலுவலகத்தை விட்டு வெளியேகூட வருவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று (05-11-2023) திருவள்ளூரில் நடைபெற்ற சென்னை மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் உடல்நிலை காரணமாகக் காணொலி மூலமாகக் கலந்துகொண்டு பேசினார்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

திடீரென்று காய்ச்சலும் - தொண்டை வலியும் எனக்கு ஏற்பட்டுவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து உங்களை எல்லாம் சந்தித்து உரையாற்றாமல் போனதற்காக நான் முதலில் என்னுடைய வருத்தத்தை மிகுந்த பணிவோடு உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் - தனித்தனியாக சொல்ல வேண்டும் என்று ஆசை, ஆனால் தொண்டை சரியில்லை. ஒட்டுமொத்த அத்தனை பேருக்கும், இதில் உண்மையாக பாடுபட்டு பணியாற்றிய நம்முடைய கட்சி உடன்பிறப்புகள், சகோதரர்கள், நண்பர்கள், நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்கள், மாவட்டச் செயலாளர்கள் எல்லாவற்றிற்கும் மேல் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை நான் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அங்கு வரவில்லை என்று சொன்னாலும் என்னுடைய நினைவுகள் எல்லாம் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது… எப்படி சென்று கொண்டிருக்கிறது என்றுதான் என்னுடைய சிந்தனை எல்லாம் இருந்தது. தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தேன். அதனால் நீங்கள் யாரும் என்னைத் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று கருதுகிறேன். அதிகம் பேசக்கூடாது என்று மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அதை எல்லாம் மீறி வந்து இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன். இப்போது என்னுடைய பேச்சைச் சுருக்கமாக தம்பி உதயநிதி ஸ்டாலின் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிகழ்வில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாசித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை பின்வருமாறு:

இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்றால், நாம் செய்த – செய்கிற சாதனைகளை மட்டும் சொல்லாமல், பாஜக-வின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டும்!

தமிழ்நாட்டுக்காக எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொண்டு வராமல் தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது. பா.ஜ.க.வின் இந்தத் துரோகத்தையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பா.ஜ.க.வின் கைப்பாவையாக அத்தனை துரோகத்துக்கும் சுயநலத்துடன் துணை நின்றது, அ.தி.மு.க.!

இன்றைக்குப் பிரிந்தது போல நாடகம் நடத்தும் இந்த கும்பலின் துரோகங்களைப் பட்டியல் போட்டு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்!

தி.மு.க.வும் இந்தியா கூட்டணியும் பா.ஜ.க.வின் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்துகிறது என்றுதான், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது பாஜக அதனால்தான், வருமான வரித்துறை ரெய்டு எல்லாம் நடைபெறுகிறது.

ரெய்டுகள் மூலமாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல் நம்மையும் மிரட்டலாம் என்று பகல்கனவு காண்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கும் – அச்சறுத்தல்களுக்கும் – மிரட்டல்களுக்கும் பயப்படும் இயக்கமல்ல திமுக.!

75 ஆண்டுகாலமாக இதையெல்லாம் எதிர்த்து நின்றுதான் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்; அந்த வெற்றி என்றைக்கும் தொடரும்! வருமானவரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்களுக்குத் தெரிகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அவரவர் அலுவலகத்தை விட்டு வெளியேகூட வருவதில்லை.

ஆனால், இங்கு நம் தமிழ்நாட்டில், நம்முடைய இயக்கத்தினர் ஒவ்வொருவரையாகச் சோதனை செய்கிறார்கள். இப்போது அமைச்சர் சகோதரர் வேலு அவர்களைச் சோதனை செய்கிறார்கள். இப்படி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் ரெய்டுகளில், வழக்குகளில் – Conviction Rate எவ்வளவு என்று பார்த்தால், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் ஒரு விழுக்காடு கூட இல்லை.

வெறும் அரசியல் பழிவாங்கலுக்கான - பாஜக-வின் கூட்டணிக் கட்சிகள்தான் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும்! அதனால்தான் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மிக மிக முக்கியம் என்று சொல்கிறேன். இந்தத் தேர்தலில் நாம் பெறப்போகிற வெற்றி என்பது, மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும்.

கொள்கை என்று எதுவுமே இல்லாமல், ஊழல் மட்டுமே அச்சாணி என்று ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை நாசப்படுத்திய அ.தி.மு.க.வும் – தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழ்நாடு என்ற அடையாளத்தையே சிதைக்க நினைக்கும் பாஜக-வும் –சுயநலத்தின் காரணமாக இந்த இரு கட்சிகளுக்கும் துணை போகும் அதன் கூட்டணிக் கட்சிகளும் - வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி - மறைமுகக் கூட்டணியாக வந்தாலும் சரி, தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது!

இது, கருணாநிதியின் உடன்பிறப்புகளான உங்கள் கையில்தான் இருக்கிறது. நாற்பதுக்கும் நாற்பது என்கிற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும். திமுக உடன்பிறப்புகளாக நம்முடைய இலக்கு இதுதான். அதற்கு இன்று முதல் உழைத்தாக வேண்டும்! இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடித்தாக வேண்டும்! வளமிகு இந்தியாவை உருவாக்க வேண்டும்! அடுத்து வெற்றி விழா கூட்டத்தில் சந்திப்போம்! வாழ்க இந்தியா! வெல்க இந்தியா கூட்டணி. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Tags :
BJPChennaiCMO TamilNaduDMKDMK PresidentMK Stalinmodinews7 tamilNews7 Tamil UpdatesParliament ElectionTamilNaduTN GovtUdhayanidhi stalin
Advertisement
Next Article