சபரிமலை ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்...
சபரிமலைக்கு இணையாக குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் வரத்து காணப்படுவதால், அதிகாலை முதலே அருவிகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ந்து வருகின்றனர்.
கேரள மாநிலம் சபரிமலைக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து, பக்தர்கள் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அதிலும், இங்கு கேரள பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு பக்தர்களின் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து, பாதுகாப்பு பணி ஆகியவற்றில் சபரிமலை தேவசம் நிர்வாகம் மற்றும் கேரள மாநில நிர்வாகம் சற்று திணறி வருகிறது. சபரிமலைக்கு செல்லும் தமிழ்நாடு பக்தர்களில் பலர், தென்காசி மார்கமாக கேரளாவை அடைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவ்வாறாக திட்டமிட்டு பயணிக்கும் பக்தர்களின் வருகையில், தென்காசி மாவட்டத்தில் தற்போது, சபரிமலைக்கு இணையாக குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று வார விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே அருவி கரையில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் வரத்து உள்ளதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் குவிந்துள்ள மக்களும், பக்தர்களும் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.