அய்யா வைகுண்டர் 192-வது அவதார தினவிழா!
அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர்
கடலில் பதமிடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பக்தி கோசம் முழங்க வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கடற்கரை பதியில், அய்யா வைகுண்டர் அவதார தின விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 192-வது அவதார தினவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணியளவில் இருந்து அய்யாவுக்கு தாலாட்டு பாடுதல், அபயம் பாடுதல், பள்ளி உணர்த்தல் உள்ளிட்ட பணிவிடைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சூரிய உதயத்தின் போது பள்ளியரையில் உள்ள பணிவிடை பொருட்களுக்கு கடல் பதமிடுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
சூரிய உதயத்தில் அய்யா அவதரித்ததாக கருதி, மக்கள் மலர்கள் தூவி வழிபட்டனர். இதனை தொடர்ந்து கோயில் நடைதிறக்கப்பட்டு அவதார விழா பணிவிடை, உகம்பெருக்குதல், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.