அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதுதவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி காந்தின் இல்லத்துக்கு சென்ற ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் செந்தில்குமார், பிரகாஷ், ராம ராஜசேகர், ராம்குமார் மற்றும் பாஜக நிர்வாகி அர்ஜுனமூர்த்தி ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர்.