அயோத்தியில் பிரதிஷ்டை நிகழ்ச்சி; தமிழ் மொழியில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும் - காவல்துறை அதிகாரி தகவல்!
அயோத்தியில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் பக்தர்களுக்கு வசதியாக தமிழ் மொழியிலும் அறிவிப்பு பலகை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அங்கு ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி இந்த கோயில் குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்த தமிழ்நாடு பிரபலங்கள்…
கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள மூலவர் குழந்தை ராமரின் சிலை 8 அடி உயரம், 3 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 7,000 க்கும் மேற்பட் தொழிலதிபர்கள் குறிப்பாக முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், கங்கனா ரணாவத் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மக்களின் வசதிக்காக அயோத்தி நகரின் பல்வேறு பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்ட உள்ளன.
மேலும், பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு செல்லும் தென்னிந்திய பக்தர்களின் வசதிக்காக தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படவுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.