திண்டுக்கலில் இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறை!
திண்டுக்கலில் தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழ்நாட்டில் விபத்துக்களை குறைக்கும் நோக்கிலும், மக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் வகையிலும் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், அவருடன் பயணிக்கும் பயணி, இருவரும் தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும், சாலை விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசும், போக்குவரத்து காவல்துறையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகல் நகர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலர்கள், சாலையில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், பேருந்தில் படிக்கட்டில் நிற்கக்கூடாது, தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது, சாலை பாதுகாப்பு விதிகளை மதிக்க வேண்டும் என்ற பதாகைகளுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி 15 பேருக்கு தலைக்கவசங்கள் வழங்கினர்.
நமது உடம்பில் உள்ள உறுப்புக்கள் அனைத்தும் விலைமதிப்பற்றது. அதையும் நினைத்து
கொள்ளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் மொபைல் போனுக்கு பாதுகாப்புக்காக மேலே
டெம்பர் கிளாஸ் மற்றும் கவர் போடுகிறீர்கள். பத்தாயிரம் ரூபாய் செல்போனுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நீங்கள், உங்களது விலைமதிப்பற்ற உயிரை பாதுகாக்க வேண்டும். அதற்காக கண்டிப்பாக தலைக்கவசம் அணியுங்கள். பேருந்தில் படியில் நிற்காதீர்கள். மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டாதீர்கள். சாலை விதிகளை மதித்து செல்லுங்கள்” என்று அறிவுரை கூறினார்.