Data Hacking தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் - சென்னை காவல் ஆணையர்!
Data Theft ல் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் Data Hacking தொடர்பாக விழிப்புணர்வாக இருக்கும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியை சார்ந்த புகார்தாரர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், தங்களுடைய நிறுவனத்தில் அமேசான் வெப்சர்வீஸ் மூலம் cloud computing மென்பொருட்களை வங்கி நிறுவனங்களுக்கு தயாரித்து கொடுக்கும் பணியை மேற்கொள்கிறது என்றும், தங்களுடைய சில வாடிக்கையாளர்களின் AWS account அங்கீகரிக்கப்படாத மற்றும் மோசடியான முறையில் hacking செய்யப்பட்டது என்றும், இக்குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் AWS Account யை மீட்டு தரும்படியும் புகாரளித்தார்.
இந்த புகார் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணையில், மோசடி செய்தவரின் IP முகவரி கிடைத்தது. CAF மூலம் பெறப்பட்ட இந்த தகவலில் எடிசன் என்பவர் மேற்படி மோசடியில் ஈடுபட்டுள்ளதும், அவர் புகார்தாரரின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் என்பதும் தெரிய வந்தது.
அதன்பேரில், மேற்படி மோசடியில் ஈடுபட்ட நீலாங்கரையை சேர்ந்த எடிசன், ராம்குமார், ஆதம்பாக்கத்தை சேர்ந்த காவ்யா வசந்தகிருஷ்ணன், பெங்களூரை சேர்ந்த AS.ரவிதா தேவசேனாபதி மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த கே.கருப்பையா ஆகியோர் கடந்த மாதம் 25-ம் தேதியன்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 லேப்டாப், 1 ஐபேட் மற்றும் 4 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. கைதானவர்கள் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் நிறுவனங்கள் டேட்டா hacking, தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்குமாறும், இது தொடர்பான புகாருக்கு சைபர் கிரைம் சேவை எண் 1930 தொடர்பு கொள்ளவும் அல்லது இது தொடர்பான புகாரை பதிவு செய்ய தேசிய சைபர் கிரைம் ரிபோடிங் போர்டல் www.cybercrime.gov.in ல் பதிவு செய்யவும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.