அமெரிக்க தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் ’புதுமைப்பித்தன் நினைவு’ விருதுகள் | விட்டல் ராவ், வைதேகி ஹெர்பர்ட்டுக்கு அறிவிப்பு!
அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 28ஆவது (2023) ஆண்டின் ’புதுமைப்பித்தன் நினைவு’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா வாழ் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பால், கலை - இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் வழங்கப்படுகிறது. விளக்கு இலக்கிய அமைப்பு அமெரிக்க வாழ் நவீன தமிழ் இலக்கிய அன்பர்களால் 1994 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டு, 1998 ஆண்டில் ஓர் லாப நோக்கமற்ற அமைப்பாக நிறுவப்பட்டது.
நண்பர்களின் முயற்சிகளாலும், உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களின் ஒத்துழைப்போடும் நவீன தமிழ் இலக்கியத்தைப் பற்றிய புரிதலைப் ஊக்குவிக்கவும், மறைந்திருக்கும் மாணிக்கங்களை வெளிக்கொணரவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலில் தகுதிவாய்ந்த படைப்பாளிகள் உரிய அங்கீகாரமும், கவனமும் பெறவேண்டும் என்பதுதான் இந்த விருதின் நோக்கம். விருதுடன் ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 28ஆவது (2023) ஆண்டின் ’புதுமைப்பித்தன் நினைவு’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எழுத்தாளர் விட்டல் ராவ்-க்கு புனைவிலக்கியம் பிரிவிலும், வைதேகி ஹெர்பர்ட்டுக்கு புனைவிலி இலக்கியம் (மொழிபெயர்ப்பு) பிரிவிலும் விருது வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 28வது (2023) ஆண்டின் “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் சி.மோகன், ஆய்வாளர் வ.கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவின் பரிந்துரைகளிலிருந்து 2023 ஆம் ஆண்டின், விருதுக்குரியவர்களாக இரு எழுத்தாளர்களை விளக்கு செயற்குழு தேர்வு செய்துள்ளது. அவர்கள் விட்டல் ராவ் – புனைவிலக்கியம் மற்றும் வைதேகி ஹெர்பர்ட் – புனைவிலி இலக்கியம் (மொழிபெயர்ப்பு)” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.