பறவைக் காய்ச்சல், அம்மை, பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்புகள்: 3 லட்சம் மருந்துகள் இருப்பு!
கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் வந்தாலே வெயிலின் தாக்கத்தால் அம்மை, காலரா, பொன்னுக்கு வீங்கி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்கும். அந்த வகையில் இந்தாண்டும் வைரஸின் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலானது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.H5N1 வகை வைரஸ் மூலம் ஏற்படும் அந்த பாதிப்பு மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. இவை அனைத்துக்கும் ஓசல்டாமிவிர் உள்பட சில வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. அவை போதிய எண்ணிக்கையில் இருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளில் வெப்ப அலை நிலவாது” - வானிலை ஆய்வு மையம்!
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
"ஆண்டுதோறும் கோடை காலத்தில் தட்டம்மை, சின்னம்மை பாதிப்புகள் அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர, காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மாத்திரைகளும் தேவையான அளவு உள்ளன. பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்படும். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.