லாரி மீது ஆட்டோ மோதி விபத்து | பள்ளி குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!
ஜார்கண்ட்டில் சாலை விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தின் மதுவாடண்ட் கிராமத்திற்கு அருகில் இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோ எதிரே உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 3 பள்ளி குழந்தைகள் மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 4 பள்ளி குழந்தைகள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். சாலை விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட நால்வர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.