சென்னை | தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்!
சென்னையில் அண்ணா சாலை மற்றும் ராஜரத்தினம் மைதானம் சாலையில் நேற்று (மார்ச்.19) தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்ககளின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சங்கத்தின் சார்ப்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பட்ஜெட்டில் ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுனர்கள் பற்றிய எந்த ஒரு திட்டமும் அறிவிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு அரசுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாகவே நேற்று அவர்கள் ஆட்டோக்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், உரிய விதிமுறைகள் இல்லாமல் செயல்படும் பைக் டேக்ஸிக்களை தடை செய்ய வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஆன்லைன் அபராதத்தை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற 24 ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிற்று போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.