#AUSvsPAK | டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்கள்... சாதனை படைத்த கிளென் மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (நவ.14) நடைபெற்றது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அங்கு கனமழை பெய்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆட்டத்தை தொடங்க நீண்ட நேரம் ஆனதால் 20 ஓவர்களுக்கு பதிலாக 7 ஓவர்களாக குறைக்கப்பட்டன.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அபாஸ் அப்ரிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதனையடுத்து 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியின் மூலம், ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதன்படி, இந்த சாதனையை படைத்த 3வது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தத்தில் 16வது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். மேக்ஸ்வெல் இதுவரை 448 போட்டிகளில் பங்கேற்று, 421 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கிறார். மொத்தம் 10,031 ரன்களை எடுத்து பேட்டிங் சராசரி 27.70 வைத்திருக்கிறார். இவற்றில், 7 சதங்களும், 54 அரை சதங்களும் அடங்கும். இவருக்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் (12,411 ரன்கள்) மற்றும் ஆரன் பின்ச் (11,458 ரன்கள்) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.