ஆஸ்திரேலிய கடற்படை குழு இந்தியா வருகை - இருதரப்பு கடற்படை உறவு குறித்து ஆலோசனை!
ஆஸ்திரேலிய கடற்படை குழு மும்பையில் உள்ள மேற்குக் கடற்படை தலைமையகத்தை பாா்வையிட்டதாகவும், இரு தரப்பு கடற்படை உறவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில்,
"ஆஸ்திரேலிய கடற்படையின் 5 பேர் அடங்கிய குழு மும்பையில் உள்ள மேற்குக் கடற்படை தலைமையகத்தை நேற்று முன்தினம் (ஏப். 5) பார்வையிட்டது. செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து அவர்களுக்கு இந்திய கடற்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர். மும்பை கப்பல்கட்டும் தளத்தில் உள்ள உள்நாட்டில் தயாரான போா்க் கப்பல் மற்றும் நீா்மூழ்கிக் கப்பலை அந்தக் குழுவினர் பாா்வையிட்டனர்.
மசகான் கப்பல்கட்டும் நிறுவனத்தை பார்வையிட்ட அவர்களுக்கு, தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. ஆஸ்திரேலிய குழுவினருடன் மேற்குக் கடற்படை தலைமையகத்தின் தலைவர் சஞ்சய் ஜே.சிங் ஆலோசனை நடத்தினார். ஆஸ்திரேலிய கடற்படையின் வருகை இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்.
இந்திய பெருங்கடல் வளையம் (ஐஒஆர்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இரு நாடுகளும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி, வளர்ச்சி குறித்து ஒரே பார்வையைக் கொண்டுள்ளன. இது கலாசார மற்றும் தூதரக பரிமாற்ற வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது” என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.