3வது முறையாக யு-19 கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வென்றது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் யு19 ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. மொத்தம் 41 போட்டிகள். முதல் அரையிறுதியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. இதனைத்தொடர்ந்து 2வது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.
பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிக்கு முன்னேறியது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸி அணிகள் மோதின. 2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. அதனையடுத்து இரு அணிகளும் இந்த இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியிலாவது இந்தியா ஆஸி அணியை வீழ்த்துமா என ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று (பிப். 11) நடைபெற்ற போட்டியில் ஆஸி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது. 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங்- அர்ஷின் குல்கர்னி களமிறங்கினர்.
அர்ஷின் குல்கர்னி 3 ரன்னில் இருக்கும் போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் 43.5 ஓவர்களிலேயே 174 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்டானது. ஆஸி அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.