இந்தியாவை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி! தொடரையும் முழுவதுமாக கைப்பற்றி அசத்தல்!
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய மகளிரணி தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபோபி லிட்ச்ஃபீல்ட் 119 ரன்களும் (16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்), கேப்டன் ஹேலி 82 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஸ்ரேயங்கா பட்டீல் 3 விக்கெட்டுகளையும், அமன்ஜோட் கௌர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இந்திய மகளிரணி 32.4 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 29 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் முழுவதுமாக கைப்பற்றியது.