For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Aus vs Pak: ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹேசில்வுட் அதிரடி - திணறும் பாகிஸ்தான்!

03:06 PM Jan 05, 2024 IST | Web Editor
aus vs pak  ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹேசில்வுட் அதிரடி   திணறும் பாகிஸ்தான்
Advertisement

பாக். - ஆஸி. அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் ஒரே ஓவரில் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடர் போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

முதல் நாள் ஆட்டம்

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 77.1 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 88 ரன்களும், அமீர் ஜமால் 82 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 6 ரன்களுடனும் , உஸ்மான் கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 2வது நாள் ஆட்டம்:

நேற்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. அணியின் ஸ்கோர் 70 ரன்னாக இருந்த போது டேவிட் வார்னர் 34 ரன்கள் எடுத்து ஆகா சல்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கவாஜா 47 ரன்களில் அமீர் ஜமால் பந்துவீச்சில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்ததால் ஆட்டம் மீண்டும் தொடங்கவில்லை.

3வது நாள் ஆட்டம்:

இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. மார்னஸ் லபுசேன் , ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். அணியின் ஸ்கோர் 187 ரன்னாக இருந்த போது ஸ்மித் 38 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த லபுசேன் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த மார்ஷ் 54 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 38 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 109.4 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய அமீர் ஜமால் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.தொடர்ந்து 14 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் விளையாடியது.தொடக்கத்தில் அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் சைம் அயூப், பாபர் அசாம் இணைந்து சிறப்பாக விளையாடினர். சைம் அயூப் 33 ரன்களிலும் , பாபர் அசாம் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சவுத் ஷகீல் 2 ரன்களுடனும், சஜித் கான், ஆகா சல்மான் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது.

ஒரே ஓவரில் முக்கியமான மூன்று விக்கெட்

ஆஸ்திரேலியா சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதில் ஒரே ஓவரில் (W) (0) (W) (0) (W) (0) என முக்கியமான 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தினை மாற்றினார். தற்போது பாகிஸ்தான் அணி 82 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளை 4வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags :
Advertisement