For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆடிக் கிருத்திகை | முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு - நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

10:10 AM Jul 29, 2024 IST | Web Editor
ஆடிக் கிருத்திகை   முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு   நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
Advertisement

இன்று ஆடி கிருத்திகையை  முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். 

Advertisement

தமிழ்நாட்டில் ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் அதிகாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு சென்றனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோயில்

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பால்குடம் எடுத்தும் காவடி சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருத்தணி முருகன் கோயில்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா விமர்சையாக நடைபெற்றது. மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டு தங்க வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, திருத்தணி கோயில், மலைப்பாதை, சரவணப் பொய்கை தெப்பக்குளம் உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,800 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருத்தணி- சித்தூர் சாலையில் முருகூர், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பட்டாபிராமபுரம், சென்னை பைபாஸ் ரவுண்டானா அருகே, அரக்கோணம் சாலையில் கார்த்திகேயபுரம் என,4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முக்கிய விழாவான கிருத்திகை திருவிழா, முதல் நாள் தெப்பத் திருவிழா இன்று (29-ம் தேதி) நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அண்ணாமலையார் கோயிலில் உள்ள பழனி ஆண்டவர் ஆலயம் மற்றும் அருணகிரிநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
Tags :
Advertisement