சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு... தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை!
நீலகிரி மாவட்டம், உதகையின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் தொட்டபெட்டா காட்சிமுனையில் ஒற்றை காட்டுயானை நடமாடி வருவதால், சுற்றுலா பயணிகள் தொட்டாபெட்டா காட்சிமுனைக்கு செல்ல இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
உதகை வனப் பகுதியில் தற்போது வறட்சி நிலவும் நிலையில் விலங்குகள் உணவுத் தேடி குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உலவுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தொட்டபெட்டா செல்லும் சாலைகளில் உலவியது.
இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு யானை வனத்துக்குள் விரட்டப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இன்று தொட்டாபெட்டா காட்சிமுனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.