TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு... 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?
குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4, குரூப்-2, குரூப்-2A, குரூப்-1 ஆகிய பிரிவுகளில் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த சில ஆண்டுகள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. 2022ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள் : பாக்ஸிங் டே டெஸ்ட் – தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துமா இந்திய அணி?
அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த குரூப் 4 தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் மூலம், 7 ஆயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.
இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் சு.கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
"இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு குரூப் 4 தேர்வை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலையில் நடந்தது. காலியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பாரிமுனையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்காக தேர்வர்கள் எந்தெந்தத் தேதிகளில் அழைக்கப்பட்டுள்ளனர் என்கிற விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் கைப்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தனியாக தபால் மூலம் விவரங்கள் தெரிவிக்கப்படாது. சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு ஏதும் அளிக்கப்படாது" என்று தெரிவித்துள்ளார்.